பள்ளி செல்லா குழந்தைகள் 106 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு


பள்ளி செல்லா குழந்தைகள் 106 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
x

குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 106 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 106 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கலந்துரையாடல் கூட்டம்

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பிற்கான கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி முதற்கட்டமாக கடந்த 3-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற்றது. அப்போது 106 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இடம் பெயர்ந்த குழந்தை, நடை பாதையில் வசிப்பவர்கள், மேம்பாலங்களின் கீழ் வசிக்கும் வீடற்றவர்கள், வெளி மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள், பஸ் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், செங்கள் சூளைகள், கட்டுமான பணிகள், கல்குவாரி போன்றவற்றில் பணிபுரியும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் குழந்தைகள் ஏதேனும் உள்ளனரா? என்பதை குடியிருப்புகளில் வீடு வாரியாக சென்று கண்டறிய வேண்டும்.

மேலும் அனைத்து துறையை சேர்ந்தவர்கள் பள்ளிச் செல்லா குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களை கண்டறிவதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகாமையில் உள்ள பள்ளியில் வயதுக்கேற்ப வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். அந்த குழந்தைகளின் விவரங்களை இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்வார்கள்.

100 சதவீதம் வருகை

அனைத்து வட்டார வளமையத்தில் உள்ள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய பிறத்துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுப்பு பணியை தீவிரமாக நடத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் பள்ளிச்செல்லா குழந்தைகள் இல்லை என 100 சதவீதம் வருகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, உதவித்திட்ட அலுவலர் பிராங்கிளின் ஜேக்கப், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முருகன், பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஹரிப்பிரியா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story