புகையிலை பொருட்கள் விற்ற 107 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 107 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீசாருக்கு, சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட 45 போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

400 கிலோ பறிமுதல்

அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சிதம்பரம் உட்கோட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கடலூர் உட்கோட்டத்தில் 20 பேரும், விருத்தாசலத்தில் 5 பேர், நெய்வேலியில் 9 பேர், சேத்தியாத்தோப்பு 17 பேர், பண்ருட்டி 15 பேர், திட்டக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 10 பேர் என மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story