செயற்கையாக ஆள் பற்றாக்குறை ஏற்படுத்தி 108 ஆம்புலன்சு திட்டத்தை முடக்க கூடாது-தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தின் மாநாடு தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். கோவை மண்டல செயலாளர் சிவகுமார், மண்டல குழு உறுப்பினர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் தேவராசு நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சாமுவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
செயற்கையாக ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி 108 ஆம்புலன்சு திட்டத்தை முடக்க கூடாது. தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு சேவையை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும். 108 ஆம்புலன்சு தொழிலாளர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் ஆகியவற்றை தீபாவளிக்கு முன்பாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான 108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.