விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.3¾ லட்சத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்
குளித்தலையில் விபத்து நடந்த இடத்தில் கிடந்த ரூ.3¾ லட்சத்தை உரியவர்களிடம் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர்.
குளித்தலை பகுதியில் உள்ள கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மொபட் மீது கார் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மொபட்டில் வந்த ஒரு பெண் உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு பெண் மற்றும் காரில் வந்த 2 பேர் என மொத்தம் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து முசிறி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விபத்து நடந்த இடத்தில் கிடந்த பையில் இருந்த ரொக்க பணம் மற்றும் இதர பொருட்களை அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சில் வைத்துவிட்டு இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயம் காயம் அடைந்தவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த 108 ஆம்புலன்சின் டெக்னீசியன் சுதாகர், பைலட் (டிரைவர்) பாலகுமார் ஆகிய 2 பேரும் பொதுமக்கள் தங்களது வண்டியில் வைத்த பையை பார்த்துள்ளனர்.
அதில் ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 370-ம் வங்கி கணக்கு புத்தகம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏ.டி.எம். கார்டுகள் இருந்துள்ளன. இதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவரின் முன்னிலையில் பொதுமக்கள் தங்களது ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்த பணம் மற்றும் இதர பொருட்களை காண்பித்து ஒப்புகை கையெழுத்து பெற்று அவரிடம் ஒப்படைத்தனர்.
விபத்து நடந்த இடத்தில் கிடைத்த பணத்தை தாங்கள் எடுத்துக் கொள்ளாமல் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்த நபர்கள், தங்களை நம்பி கொடுத்த தொகையை உரியவர்களிடம் ஒப்படைத்த முசிறி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆகியோரின் மனிதாபிமானம், நேர்மையான செயலை அறிந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.