பழனி பெரியாவுடையார் கோவிலில் 108 சங்காபிஷேகம்
வருடாபிஷேகத்தையொட்டி பழனி பெரியாவுடையார் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
பழனி கோதைமங்கலம் அருகே சண்முகநதி கரையோரத்தில் பெரியாவுடையார் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு பிரதோஷம், விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று பெரியாவுடையார் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கலச பூஜை, விநாயகர் பூஜை, பூர்ணாகுதி மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கலசம் வெளிப்பிரகாரம், உட்பிரகாரங்களில் சுற்றி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் புனிதநீரால் பெரியாவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. முன்னதாக வருடாபிஷேகத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதில் 108 சங்குகள் வைத்து பூஜைகள் நடந்தது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவநேசன், தனசேகர், பழனிவேலு, அசோக், செந்தில், சதீஷ், குமரகுரு, சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.