'எம்டன்' கப்பல் சென்னையில் குண்டுவீசி 108 ஆண்டுகள் நிறைவு: நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை


எம்டன் கப்பல் சென்னையில் குண்டுவீசி 108 ஆண்டுகள் நிறைவு: நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை
x

‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 108 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சென்னையில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை,

முதலாம் உலகப்போர் கடந்த 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை 'மதராசப்பட்டினம்' என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தை அமைத்திருந்தனர்.

இந்தநிலையில் ஜெர்மனியின் கோரப்பார்வை சென்னை மீது திரும்பியது. ஜெர்மனியின் "எஸ்.எம்.எஸ். எம்டன்" என்ற நவீன போர்க்கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு 10 மணி அளவில் சென்னையில் இருந்து 2 கடல் மைல் தொலைவிற்கு வீரர்கள் வந்தனர். இவர்கள் சென்னை மாநகர் மீது 130 குண்டுகளை வீசினர். கேப்டன் வான்முல்லர் தலைமையில் வந்த இந்த கப்பலில், திருவனந்தபுரத்தை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த என்ஜினீயர் செண்பகராமன் என்ற கடற்படை அதிகாரியும் இடம் பெற்றிருந்தார்.

கல்வெட்டில் மலர் தூவி மரியாதை

சென்னையில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசிய இடத்தை காட்டும் வகையில் ஐகோர்ட்டு சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டில் ஆண்டுதோறும் நினைவு நாளில் பல்வேறு அமைப்புகள் மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் 108-வது ஆண்டு நிறைவையொட்டி, நினைவு கல்வெட்டில் செண்பகராமனின் தங்கை வழி பேரன் டாக்டர் பொ.சேதுசேஷன் மற்றும் ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் வந்து கோவில் சார்பில் சேதுசேஷன் குடும்பத்தினருக்கு பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பாரதியாரின் பேத்தி இரா.உமாபாரதி, பா.ஜ.க. வக்கீல் அணி பார்வையாளர் வக்கீல் கே.ராஜேந்திரன், வக்கீல் செங்குட்டுவன், கல்யாணராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போர்க்கப்பலுக்கு பெயர்

இதுகுறித்து டாக்டர் பொ.சேதுசேஷன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தியாகி செண்பகராமன் பிறந்த ஊரில் அரசு அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். அத்துடன் ஜெர்மனி போர்க்கப்பலில் பணியாற்றியபோது இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட செண்பகராமனின் பெயரில், மத்திய அரசு தயாரித்து வரும் போர்க்கப்பல் ஒன்றுக்கு 'எ.என்.எக்ஸ்.செண்பக்' என்று பெயர் சூட்டி அவருடைய தியாகத்தை போற்ற வேண்டும்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கூறியபடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செண்பகராமன் கோட்டை என்று பெயர் வைப்பதுடன், இளைய தலைமுறையினரும் அவருடைய வீரச்செயலை தெரிந்து கொள்ள பாடத்திட்டத்திலும் எம்டன் கப்பல் வரலாறு இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story