குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகளுக்கு 'சீல்' வைப்பு


குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகளுக்கு சீல் வைப்பு
x

குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கையால் 'சீல்' வைக்கப்பட்டது.

109 கடைகளில் குட்கா விற்பனை

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர்.

தஞ்சை மாநகரில் 17 கடைகள், வல்லத்தில் 7,, ஒரத்தநாட்டில் 7, பட்டுக்கோட்டையில் 32, திருவையாறில் 21, கும்பகோணத்தில் 3 , திருவிடைமருதூரில் 13, பாபநாசம் பகுதியில் 9 கடைகள் என மாவட்டம் முழுவதும் 109 கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

விளக்கம் கேட்டு நோட்டீசு

இதையடுத்து அந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் இது தொடர்பாக கடை உரிமையாளர்களிடம் வருவாய்த்துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினர்.

சில கடை உரிமையாளர்கள் விளக்கம் அளிக்காததாலும், சிலர் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாததாலும் கடைகளை 'சீல்' வைக்கும்படி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார்.

சீல் வைப்பு

அதன்படி தஞ்சை வடக்குவீதியில் உள்ள 2 கடைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் மேற்பார்வையில் தாசில்தார் மணிகண்டன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

அதேபோல் தஞ்சை மாநகரில் கொடிமரத்துமூலை, டவுன்போலீஸ் ரோடு என பல்வேறு பகுதிகளில் உள்ள 17 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 109 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

முன்னதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறும்போது, பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கடைகளில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என ஏற்கனவே திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட கடைகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

சட்ட ரீதியான நடவடிக்கை

முறையான பதில் வராத நிலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரம் இருந்ததால் அந்த கடைகளுக்கு 'சீல்'் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் சட்டரீதியாக கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கூறும்போது, ஆபரேஷன் கஞ்சா 2.0 மூலம் கடந்த ஒரு மாதத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் சோதனை நடந்து வருகிறது என்றார்.


Related Tags :
Next Story