ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில் ரூ.1,095 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்


ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில் ரூ.1,095 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
x

ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில் ரூ.1,095 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில் ரூ.1,095 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ராதாபுரம், வள்ளியூர் யூனியன்கள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளுக்கு உட்பட்ட ராதாபுரம், வள்ளியூர் யூனியன்களில் உள்ள 360 கிராமங்களுக்கும் மற்றும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் வழியில் உள்ள கிராமங்கள் உள்பட மொத்தம் 831 கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்ற சபாநாயகர் அப்பாவுவின் கோரிக்கைக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.605.75 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது தலா ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வீதம் தினமும் வழங்கப்படும்.

நகராட்சி- நகர பஞ்சாயத்துகள்

வடக்கு வள்ளியூர், பணகுடி, திருக்குறுங்குடி, ஏர்வாடி, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கும், களக்காடு நகராட்சி பகுதிக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.490 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்ட பணிகளுக்காக நகராட்சிகளின் இயக்குனரகம் மற்றும் நகர பஞ்சாயத்து ஆணையகரத்தின் மூலம் நிதி ஆதாரம் பெற்று விரைவில் இத்திட்டம் செயலாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

காவல்கிணறு, வடக்கன்குளம்

காவல்கிணறு மற்றும் வடக்கன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 15 கிராமங்களுக்கு பணகுடி அருகே உள்ள கன்னிமாராதோப்பு அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்கனவே ரூ.605 கோடியில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் 2 பஞ்சாயத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் குடிநீர் வழங்கப்படும்.

ஆவரைகுளம், அடங்கார்குளம், சிதம்பராபுரம், யாக்கோபுரம், இருக்கன்துறை, பழவூர் பஞ்சாயத்துகளை சேர்ந்த கிராமங்களுக்கு பொதிகை அணை அருகில் நீராதாரம் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்கனவே தாமிரபரணி ஆற்றை நீராதாராமாக கொண்ட ரூ.605 கோடியில் நிறைவேற்றப்படவுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தில் மேற்படி பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட்டு குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நீருந்து குழாய்கள் கால்வாய் கிராமம் வழியாக செல்வதால் அடிக்கடி உடைப்பு மற்றும் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதால் பிரச்சினைகள் உள்ளதால் மாற்று வழியில் குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கைக்கு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் யூனியன் கால்வாய் குடியிருப்பு வழியாக செல்லும் குடிநீர் குழாய்களை ஆதிச்சநல்லூர் வழியாக மாற்று வழியில் பதிக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story