கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் 1,095 பேர் பங்கேற்பு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் 1,095 பேர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை தாலுகாவில் காலியாக உள்ள 10 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 2,422 பேர் இணையதளத்தின் மூலமாகவும், 56 பேர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் என மொத்தம் 2,478 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த பணியிடத்திற்காக கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்களில் 1,714 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இவர்களுக்கான நேர்முக தேர்வு திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
இந்த நேர்முக தேர்வு தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் முருகன் மேற்பார்வையிட்டார்.
இதில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் தமிழ், ஆங்கில வாசிப்பு திறன் கண்டறியப்பட்டது. கடந்த 2-ந்தேதி முதல் 7 மற்றும் 8-ந்தேதிகள் விடுமுறை நாட்கள் நீங்களாக 10-ந்தேதி (நேற்று) வரை நடைபெற்ற நேர்முக தேர்வில் 1,714 பேரில் 1,095 பேர் பங்கேற்றனர். மீதமுள்ள 619 பேர் வரவில்லை.