அரூர் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல் கண்டுபிடிப்பு


அரூர் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல் கண்டுபிடிப்பு
x

அரூர் அருகே ஏரிக்கரை ஓரத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லை வரலாற்று துறையினர் கண்டறிந்தனர்.

தர்மபுரி

நடுகல்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சந்தப்பட்டி கிராமத்தில் ஏரிக்கரையில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டறியப்பட்டது. இந்த நடுகல்லை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர்.

இந்த நடுகல் குறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:-

தமிழகத்தில் பழங்கால நடுகல்கள் அதிகமாக கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒன்றான தர்மபுரி மாவட்டத்தில் இன்னும் கண்டறியப்படாத நடுகல்கள் அதிக அளவில் உள்ளன. இப்போது கண்டறியப்பட்டுள்ள நடுகல் பிற்கால சோழர் நடுகல் ஆகும். இந்த கல்லில் வீரனின் உருவம், அதன் கொண்டை அமைப்பு நேராக இருப்பதால் இது சோழர் கால நடுகல் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

போர் வீரன்

சங்க காலம் முதல் தகடூர் பகுதியை ஆண்ட அதியமான் மரபினர் சோழர் காலத்தில் அவர்களுக்கு வரி செலுத்தக்கூடிய குறுநில மன்னர்களாக மாறினார்கள். இக்கல்லில் காட்டப்பட்டுள்ள வீரனின் உருவமானது போர் வீரனுக்குரிய உடல்வாகுடன் உயரமான, கட்டமைப்பாக காட்டப்பட்டுள்ளது. அருகில் இருக்கக்கூடிய பெண்ணின் முகம் வீரனை நோக்கி உள்ளது.

இந்த நடுகல்லில் இடம் பெற்று இருக்கும் நபர் உள்ளூர் தலைவனாகவோ அல்லது சிறிய அளவிலான பகுதியை ஆளக்கூடிய இனக்குழு தலைவராகவோ இருந்திருக்கலாம். இந்த வீரன் இறந்தவுடன் அவரது மனைவியும் இந்த வீரனின் சிதையில் வீழ்ந்து உயிர் விட்டிருக்கக்கூடும். எனவே இதை நடுகல்லாகவும், சதி நடுகல்லாகவும் கருதலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story