10-ம் வகுப்பு தேர்வு முடிவு; 4 மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு தேர்வு முடிவு; 4 மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
x

10-ம் வகுப்பு தேர்வு முடிவை தொடர்ந்து 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவரும் உயிரை மாய்த்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மூத்த மகன் தனஞ்செழியன் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இவர் பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென தனஞ்செழியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனஞ்செழியன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 226 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

தேர்வு முடிவு எப்படி வருமோ என்கிற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கரூரில்...

கரூர் மாவட்டம் மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் சிவா பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவில் அவர் தமிழ், கணித பாடங்களில் தோல்வி அடைந்து இருந்தார். இதனால் மனமுடைந்த சிவா வீட்டில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.

மேலும் 3 பேர்

மதுரை மாவட்டம் பொன்னையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகள் காளீசுவரி (வயது 16). இவர் பேரையூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதி இருந்தார். காளீசுவரி 500-க்கு 323 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். தான் நன்றாக படித்தும் குறைந்த மதிப்பெண்கள்தான் கிடைத்திருப்பதாக மனமுடைந்த மாணவி காளீசுவரி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் கருக்கல்வாடி சேவகனூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் நிருபன் (வயது 15) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 27 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் வெற்றிவேல்(வயது 15). 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த வெற்றிவேல் இந்த தேர்வில் தமிழ்பாடத்தில் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

4 பேர் தற்கொலை முயற்சி

விழுப்புரம் பகுதியைச்சேர்ந்த 15 வயதுடைய மாணவன், தேர்வில் தோல்வியடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதேபோல் காணை பகுதியில் ஒரு மாணவி தேர்வில் தோல்வியடைந்ததாலும், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும், விழுப்புரம் பகுதியைச்சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் 4 பேரும் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story