10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
x

சேலம் மாவட்டத்தில் 179 மையங்களில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் 179 மையங்களில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 10 மையங்கள் தனித்தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்தனர்.

தேர்வு மையங்களுக்கு நேற்று காலை 8 மணிக்கே மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், சுகவனேசுவரர் கோவில், ராஜகணபதி கோவில்களில் தேர்வு எழுதுவதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு எழுவதற்கு சென்றதை காணமுடிந்தது.

தேர்வு மையங்களில் கண்காணிப்பு

தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. நேற்று நடந்த தமிழ் பாட தேர்வை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்எழுதாமல் ஆப்சென்ட்ஆகியுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களில் தேர்வுகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் 28 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 189 முதன்மை கண்காணிப்பாளர்கள், 189 துறை அலுவலர்கள், 3,430 அறை கண்காணிப்பாளர்கள், 210 ஆசிரியரல்லா பணியாளர்கள், 250 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதனிடையே, சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் தேர்வுகளை முறையாக நடப்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 179 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story