10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வாணியம்பாடி அருகே பல ஆண்டுகளாக தந்தை பார்க்க வராததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பல ஆண்டுகளாக தந்தை பார்க்க வராததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பாப்பானேரி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவரது மனைவி சரண்யா, கட்டிட தொழிலாளி. இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் தனுஸ்ரீ(வயது 15), நிம்மியப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தாயுடன் அவர் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனுஸ்ரீ அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கலகலப்பாக பேசியுள்ளார்.
பின்னர் யாரும் கவனிக்காத நேரத்தில் வீட்டில் இருந்த ஒரு துணியால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தாய் சரண்யா கட்டிட வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்கியவாறு பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து தனுஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏக்கத்தில் தற்கொலை
சிறுமியின் தாய் சரண்யா, கணவர் செந்தமிழ் செல்வனை 2010-ம் ஆண்டு முதல் பிரிந்து கடந்த 13 வருடங்களாக தனுஸ்ரீயுடன் வசித்து வந்துள்ளார்.
தன் தந்தை தன்னை பார்க்க வரவில்லை என்ற ஏக்கதிலும் மன அழுத்தத்தில் சிறுமி தற்கொலை செய்துக்கொண்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் வீட்டு பாடம் எழுதும் நோட்டு புத்தகத்தில் அம்மா மன்னித்து விடுங்கள் என்று தனுஸ்ரீ ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.