10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நாகையில், 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் தோல்வி அடைந்தததால் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவி
நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கோபால். மீனவர். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி இந்திரா.
இவர்களது மகள் குணவதி(வயது 15). இவர், நாகையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி குணவதி அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதனை அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் குணவதியை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். குணவதியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
இது குறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.