கன்டெய்னர் லாரி மீது வேன் மோதி 11 அய்யப்ப பக்தர்கள் காயம்


கன்டெய்னர் லாரி மீது வேன் மோதி 11 அய்யப்ப பக்தர்கள் காயம்
x

நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னர் லாரி மீது வேன் மோதி 11 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 22 பேர் கேரளா மாநிலம் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி வேலூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் திரும்பி உள்ளது. இதனால் பின்னல் சென்றுகொண்டிருந்த அய்யப்ப பக்தர்கள் வேன் அந்த லாரி மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஜெயசூர்யா, சக்கரவர்த்தி, கிஷோர், ராஜ்குமார், விஜய், சத்தியராஜ் உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story