11 அடி உயர பக்த ஆஞ்சநேயர் சிலை
அனுப்பர்பாளையம்:
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருப்பதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலைக் கூடத்தில் 11 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லில் 5 டன் எடையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயரின் தலை பகுதியில் கிரீடம், சூரிய பிரம்மையும், காதுகளில் குண்டலமும், வலதுபுறம் கடாயுதம், இடதுபுறம் வாலும் அதில் மணியும் இருப்பது போன்று சிலை உள்ளது. சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலையை செதுக்கி முடித்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.