மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் செத்தன


மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் செத்தன.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயமணி. இந்த தம்பதிக்கு சொந்தமான விவசாய நிலம், காப்புக்காடு ஓரத்தில் உள்ளது. இதில் பட்டி அமைத்து 16 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். ஜெயமணி நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வந்த ஆடுகளை பட்டியில் அடைத்தார். பின்னர் நேற்று காலை பட்டிக்கு வந்து பார்த்தபோது 11 ஆடுகள் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. மீதமுள்ள 5 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வனத்துறை அலுவலகத்துக்கு தெரிவித்தார். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலக வனவர் சத்யபிரியா, வனக்காப்பாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது மர்ம விலங்கு, ஆடுகளை கடித்து கொன்றது தெரிந்தது. பின்னர் அனுமனந்தல் அரசு கால்நடை மருந்தக உதவி மருத்துவ அலுவலர் சரண்யா நேரில் சென்று காயமடைந்த 5 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் இறந்த செம்மறி ஆடுகள் உடற்கூராய்வு செய்யப்பட்டு, புதைக்கப்பட்டன. ஆடுகளை கடித்துக்கொன்ற விலங்கு எது என்பது குறித்தும், அதன் காலடி தடம் குறித்தும் வனத்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story