11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்


11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 55 பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி

செம்பட்டு,செப்.3-

திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 55 பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளுக்கு...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் தற்போது, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

60 பேர் மீது சந்தேகம்

இதனிடையே நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏர்வேஸ் உள்ளிட்ட விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 60 பேர் மீது சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது சுமார் 55 பேரிடம் இருந்து சுமார் 200 முதல் 500 கிராம் வரை கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

11 கிலோ தங்கம்

இந்த சம்பவத்தில் சுமார் 55 பயணிகளிடம் இருந்து 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் 2 ேபர்கள் தங்கத்தை வயிற்றில் மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 55 பயணிகளிடமும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்து அதிகாரிகள் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள். இதில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் முழுவிவரம் தெரியவரும். திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்தியஅதிரடி வேட்டையில் சுமார் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story