ரெயிலில் கடத்திய 11½ கிலோகஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது


ரெயிலில் கடத்திய 11½ கிலோகஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
x

வாலிபர் கைது

ஈரோடு

ஈரோடு வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் 11½ கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ரோந்து

ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களில் கேட்பாரற்று ரெயிலில் கிடந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலில் ஈரோடு ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்கள் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை நடத்தினர்.

கைது

இந்த ரெயிலில் பயணிகளின் இருக்கைக்கு கீழ் பகுதியில் சந்தேகப்படும் வகையில் பை ஒன்று கிடந்தது. அந்த பையை எடுத்து போலீசார் சோதனையிட்டபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயிலில் கஞ்சா கடத்தியதாக மதுரை மாவட்டம் சக்குடி கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்த வேல்முருகனின் மகன் தென்னரசு (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த மொத்தம் 11½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story