ரூ.11½ லட்சம் தங்கச்சங்கிலிகள் பறிமுதல்
ரூ.11½ லட்சம் தங்கச்சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதனை பறிமுதல் செய்யும் நோக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து விமான நிலைய இயக்குனரின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று திருச்சி மாநகர கமிஷனர் உத்தரவின்பேரில் சிறப்பு காவல் படையினர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது இர்பான்(வயது 28) என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் விமான நிலைய பகுதியில் சுற்றி திரிந்ததை அறிந்து, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ரூ.9.9 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கச்சங்கிலி வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதனால் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
இதேபோல் நேற்று அதிகாலை விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்த நாசர்(31) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த 30 கிராம் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.1.65 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி 2 பேரிடம் ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதான 2 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.