பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்கு 11 மண்டபங்கள்
பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக 11 மண்டபங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்படுகிறது.
பழனி வழியாக, திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வாகன பெருக்கம், விபத்து தடுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பழனி-ஒட்டன்சத்திரம் சாலை நான்குவழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி பழனி-ஒட்டன்சத்திரம் இடையே உள்ள சத்திரப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கத்துக்கான நில அளவீடு, சாலையோர மரங்கள் வெட்டி அகற்றம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே சாலை விரிவாக்க பணிகளால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பாதை மீண்டும் அமைக்கப்படுமா? என பக்தர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, சாலை விரிவாக்க பணியோடு பாதயாத்திரை பக்தர்களுக்கான பிரத்யேக பாதையும் புதிதாக அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பாதையில் ஒவ்வொரு 100 மீட்டர் இடையே மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் இலவசமாக தங்கி செல்லும் வகையில், பழனி-ஒட்டன்சத்திரம் இடையே 11 இடங்களில் கழிப்பறைகளுடன் கூடிய மண்டபங்கள் கட்டப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது என்றனர்.