ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மாநகராட்சி அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டம்-தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 11 பேர் கைது
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சேலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அலுவலகத்துக்கு பூட்டு
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நுழைவு வாயில் மற்றும் காம்பவுண்டு சுவர் ஆகியவை சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேற்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கவியரசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அலுவலகத்தின் நுழைவு வாயிலை இழுத்து மூடி வெளிப்பக்கமாக பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
11 பேர் கைது
மேலும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அங்கு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நுழைவு வாயிலை திறந்து விடுமாறு கூறினர். முதலில் மறுத்த அவர்கள் பின்னர் திறந்து விட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு வேனில் அழைத்து சென்றனர்.