வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி


வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி
x

வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

பீகாரைச் விஸ்வநாதன் மகாதோ (வயது 27). இவரது மனைவி சங்கீதா தேவி (25). இவர்களுக்கு கிரிசன் (5), கிரித்தியா (3), கன்சன் என்ற 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். விஸ்வநாதன் மகாதோ தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த அவினாசிநகர் பகுதியில் வசித்து வந்தார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாதோ வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி சங்கீதாதேவி 3 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது தூக்கத்தில் இருந்து எழும்பிய 11 மாத குழந்தை கன்சன் வீட்டின் முன்பகுதியில் தண்ணீருடன் இருந்த வாளியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். தலைகுப்புற விழுந்ததால் குழந்தையால் சத்தம் போடமுடியவில்லை. சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய சங்கீதாதேவி குழந்தை வாளி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடி இருப்பதை கண்டு கதறி துடித்தார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சாவு

அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை கன்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் வாளி தண்ணீரில் 11 மாத குழந்தை விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story