ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை திருட்டு
திசையன்விளை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை திருட்டு போனது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் தவசிபால். இவருடைய மனைவி பத்திரகாளி. இந்த நிலையில் பத்திரகாளிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை நேற்று நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தவசிபால் அழைத்து சென்றார். இதற்காக அவர்கள் திசையன்விளையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். மன்னார்புரத்தில் பஸ் நின்றபோது, பத்திரகாளி அருகில் நின்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது பர்ஸ் மற்றும் செல்போனை காணவில்லை என்று கூறி பஸ்சில் இருந்து கீழே இறங்கி சென்று விட்டார். பின்னர் பஸ் கோட்டைக்கருங்குளம் கல்குவாரி அருகே சென்றபோது, பத்திரகாளி தனது கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பர்ஸ் காணாமல் போனதாக கூறிய பெண்ணே இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.