சென்னை மூதாட்டி தவறவிட்ட 11 பவுன் நகைகள் ஒப்படைப்பு
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த சென்னையை சேர்ந்த மூதாட்டி ஓட்டலில் தவறவிட்ட 11 பவுன் நகையை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த சென்னையை சேர்ந்த மூதாட்டி ஓட்டலில் தவறவிட்ட 11 பவுன் நகையை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மூதாட்டி தவறவிட்ட கைப்பை
சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சுஜன்பிரபா (வயது 73). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தார். காலை 10.30 மணியளவில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் சுஜன்பிரபா உணவு சாப்பிட்டார். அப்போது அவர் கொண்டு வந்த 11 பவுன் நகைகளை சிறிய கைப்பையில் போட்டு வைத்திருந்தார்.
உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக கைப்பை கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காத அவர் அங்கிருந்து சென்று விட்டார். சிறிதுநேரத்தில் அந்த கைப்பையை கண்ட ஊழியர் அதனை எடுத்து ஓட்டல் மேலாளரிடம் கொடுத்தார். அந்த பையை அவர் திறந்து பார்த்தபோது அதில், நகைகள் இருப்பது தெரிய வந்தது.
ஒப்படைப்பு
இதையடுத்து ஓட்டல் மேலாளர் கிருஷ்ணகுமார் அந்த பையை வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார். அந்த பையில் இருந்த மருத்துவமனை சிகிச்சை அடையாள அட்டையில் இருந்த எண்ணை கொண்டு மூதாட்டியின் செல்போன் எண்ணை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பெற்றார். பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் வரவழைத்து தவறவிட்ட 11 பவுன் நகையுடன் கூடிய கைப்பையை ஒப்படைத்தார்.
சுஜன்பிரபா அதனை பெற்றுக் கொண்டு ஓட்டல் நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். நகைப்பையை கொடுத்த ஓட்டல் ஊழியர் மற்றும் நிர்வாகத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.