2 பெண்களிடம் 11 பவுன் நகைகள் பறிப்பு
நாகர்கோவிலில் 2 பெண்களிடம் 11 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது தொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 2 பெண்களிடம் 11 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது தொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
முகவரி கேட்பது போல்...
நாகா்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் மெல்பா ராஜினி (வயது 51). இவர் நேற்றுமுன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு ஆலயத்துக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் கீழே இறங்கி மெல்பா ராஜினியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இதுகுறித்து மெல்பா ராஜினி நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
நகை பறிப்பு
இதே போல் நாகர்கோவில் மூவேந்தர் நகரை சோ்ந்தவர் லட்சுமி (44). இவர் இரவு வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஒரே நாளில் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டி சென்ற 2 மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.