11 நீர் பறவை இனங்கள் அழிவின்விளிம்பில் உள்ளன


11 நீர் பறவை இனங்கள் அழிவின்விளிம்பில் உள்ளன
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நீா் பறவைகளில் 11 இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நீா் பறவைகளில் 11 இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

ஆராய்ச்சி குறிப்பு புத்தகம்

குமரி மாவட்ட வனத்துறை மற்றும் பாம்பே இயற்கை வரலாற்று கழகம் இணைந்து தயாரித்த குமரி மாவட்ட உப்பள பறவைகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதா் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வன அதிகாரி இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இயற்கையை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மாவட்டத்தில் வீட்டுக்கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானங்களுக்காக நீர்நிலைகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீர்நிலைகள் சுருங்கி வருகின்றன. இவற்றை எல்லாம் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஏக்கரில் நடந்து வந்த நெல் சாகுபடி தற்போது 4 ஆயிரம் ஏக்கர் தான் நடக்கிறது.

அழிவின் விளிம்பு

குமரி மாவட்டத்தில் 62 நீா் பறவை இனங்களில் 11 இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணக்குடியில் 2 ஆயிரம் மாங்குரோ செடிகள் நடப்பட்டுள்ளன. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் பனை மற்றும் புன்னை மர கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், 'கேரளா ஸ்டோரி படத்ைத தமிழக திரையரங்குகளில் தமிழக அரசு திரையிட மறுப்பதாக கூறுவது அர்த்தமற்றது. மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தமிழக அரசு ெசய்து வருகிறது' என்றார். மாவட்ட வன அதிகாரி இளையராஜா மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி ஆகியோருக்கு நினைவு பரிசை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

விழாவில் வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், பாம்பே இயற்கை வரலாற்று கழகத்தின் துணை இயக்குனர் பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story