ரூ.15 லட்சம் மதிப்புள்ள 110 செல்போன்கள் மீட்பு
தேனி சைபர் கிரைம் போலீசாரால் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 110 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டு, காணாமல் போவது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 110 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. செல்போன்களை தவறவிட்ட நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஒப்படைத்து, இந்த பணியில் சிறப்பாக பணியாற்றிய சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், "தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்து போனது தொடர்பாக போலீஸ் நிலையங்களுக்கு இதுவரை 1,365 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் ஏற்கனவே, 714 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.15 லட்சம் மதிப்புள்ள 110 செல்போன்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்றார். இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கலந்துகொண்டனர்.