இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 110 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து 5 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், சொத்துவரி, மின்கட்டண உயர்வை திரும் பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமேசுவரம் ஆகிய 5 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 7 பெண்கள் உள்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் முருகபூபதி, கட்டுமான தொழிற்சங்க மாவட்ட தலைவர் லோகநாதன், நகர் ஒன்றிய செயலாளர் களஞ்சியம், மண்டபம் ஒன்றிய செயலாளர் தர்மராஜன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், உள்ளாட்சித்துறை மாவட்ட செயலாளர் சண்முகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
110 பேர் கைது
பரமக்குடியில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜன் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 18 பேர் கைது செய்யப்பட்டனர். சாயல்குடியில் தாலுகா செயலாளர் சொரிமுத்து தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற 3 பெண்கள் உள்பட 17 பேரும், ராமேசுவரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 14 பேரும், ஆர்.எஸ்.மங்கலத்தில் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் 11 பெண்கள் உள்பட 28 பேரும் என மொத்தம் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.