தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 110 பேர் கைது
வேலூர் ஜெயிலை முற்றுகையிட முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மக்கள் ஜனநாய கட்சி தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அன்சர் மில்லத், மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது, துணை செயலாளர் ஜாபர்கான் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் காமராசு கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஜெயில்களில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஜெயிலை முற்றுகையிட்டு போராடுவதற்காக அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி டோல்கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஜெயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.