குரூப்-4 தேர்வை 11,151 பேர் எழுதுகிறார்கள்


குரூப்-4 தேர்வை 11,151 பேர் எழுதுகிறார்கள்
x

நீலகிரியில் குரூப்-4 தேர்வுக்காக 40 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வை 11,151 பேர் எழுதுகிறார்கள் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் குரூப்-4 தேர்வுக்காக 40 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வை 11,151 பேர் எழுதுகிறார்கள் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

குரூப்-4 தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. ஊட்டி தாலுகாவில் 15 மையங்களில் 4,032 பேர், குன்னூர் தாலுகாவில் 7 மையங்களில் 2,054 பேர், கூடலூர் தாலுகாவில் 7 மையங்களில் 2,151 பேர், கோத்தகிரி தாலுகாவில் 5 மையங்களில் 1,370 பேர், குந்தா தாலுகாவில் 2 மையங்களில் 319 பேர், பந்தலூர் தாலுகாவில் 4 மையங்களில் 1,225 பேர் என 40 தேர்வு மையங்களில் மொத்தம் 11,151 பேர் எழுத உள்ளனர்.

பறக்கும் படை

தேர்வை கண்காணிக்க 9 பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் 6 மேற்பார்வை அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வுக்கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைதாள்களை கொண்டு செல்ல துணை வட்டாட்சியர் நிலையில் மொத்தம் 21 நடமாடும் வாகன வசதி உள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் நிலையில் 40 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தேர்வு எழுத செல்வதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் காலை 7 மணியில் இருந்தும், பந்தலூர் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு அறைகளுக்கு செல்லும் போது தேர்வர்கள் வெப்ப பரிசோதனை செய்து அனுப்பப்படுவார்கள். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.

அனுமதி இல்லை

தேர்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்வது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கை கடிகாரம் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story