113 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன


113 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே 113 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆலிவ் ரெட்லி ஆமைகள் சுமார் 827 முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று உள்ளது. இந்த முட்டைகளை நாய், கீரி, பறவைகள் மற்றும் மனிதர்களிடம் இருந்து பாதுகாக்க வனத்துறை ஊழியர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் முட்டைகளை சேகரித்து நாகை அருகே சாமந்தான்பேட்டை, வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரம், விழுந்தமாவடி ஆகிய கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அதன்படி சாமந்தான்பேட்டை கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்டு முட்டைகளில் இருந்து வெளிவந்த 113 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம் தலைமையில் வனத்துறையினரால் சாமந்தான்பேட்டை கடற்கரை பகுதியில் கடலில் விடப்பட்டது.


Next Story