115-வது பிறந்தநாள்: அண்ணா நினைவு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


115-வது பிறந்தநாள்: அண்ணா நினைவு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாளில் அவர் பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முன்னதாக அவர், காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் அவர் குறிப்பு எழுதி கையெழுத்திட்டார்.

காஞ்சீபுரம் மாநகராட்சி வளாகம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமூக நீதி நாள் உறுதிமொழி

நாளை பெரியாரின் பிறந்தநாளாகும். இதையொட்டி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவரது தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி, தி.மு.க. எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story