குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை 1,200-க்கும் மேற்பட்ட காவல்துறையில் ஈடுபட உள்ளனர். இவர்கள் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து பணிகள், குற்ற சம்பவங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சினிமா தியேட்டர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை அமைதியாக கொண்டாட, மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சாராயம், குட்கா, கஞ்சா போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், பழைய ரவுடிகள் மற்றும் சரித்திர குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
117 பேர் கைது
இதன் அடிப்படையில் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை சரித்திர குற்றவாளிகள் 16 பேரும், கஞ்சா, குட்கா, சாராய வழக்குகளில் 74 பேரும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர பழைய குற்றவாளிகள் 101 பேருக்கு நன்னடத்தை சான்று பெறப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் ஏதேனும் புகார்களை தெரிவிக்க 94981 00485, 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களிலும், போதைப்பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 73581 56100 என்ற செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.