காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி
x

காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

பள்ளி மாணவர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் சுபாஷ் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கட்டளை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க செல்வதாக தனது நண்பர்களுடன் கூறி விட்டு காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் சுபாஷ் வீட்டுக்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தேடுதல் பணி

இதையடுத்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் சுபாஷ் குளிக்க சென்ற கட்டளை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது சுபாஷ் அணிந்திருந்த காலணி (செருப்பு) மட்டும் கரையில் இருந்துள்ளது.இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கும், கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை ஆற்றில் இறங்கி சுபாஷை தேடியும் கிடைக்கவில்லை.

பிணமாக மீட்பு

இதையடுத்து நேற்று காலையில் இருந்து காவிரி ஆற்றில் இறங்கி தீயணைப்பு படைவீரர்கள் அங்குலம் அங்குலமாக தேடி பார்த்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலையில் சுபாஷ் காவிரி ஆற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அப்போது தான் சுபாஷ் நீச்சல் தெரியாமல் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.இதையடுத்து மாயனூர் போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story