12 நாட்களாக மூழ்கி கிடக்கும் வயல்கள்
12 நாட்களாக மூழ்கி கிடக்கும் வயல்கள்
கொள்ளிடம் ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 12 நாட்களுக்கும் மேலாக வயல்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. எனவே விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயல்களில் மூழ்கி கிடக்கும் பயிர்கள்
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் அந்த மாநில அணைகளிலிருந்து தொடர்ந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தவுடன் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.இந்த தண்ணீரின் பெருமளவு கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நேற்று வரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அய்யம்பேட்டை அருகே கரையோர கிராமங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்த நிலையில் கடந்த 12 நாட்களுக்கு மேலாக வயல்களில் பயிர்கள் தண்ணீரிலேயே மூழ்கி கிடக்கிறது.
நிவாரணம் வழங்க வேண்டும்
குறிப்பாக பழைய மன்னியாற்றின் கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வயல்களை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி, விடுபடாமல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களான பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை, கணபதி அக்ரகாரம் கிராமங்களை சேர்ந்த வயல்கள் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக மூழ்கி கிடக்கிறது. குறிப்பாக கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கால் பழைய மன்னியாற்று கரையோர வயல்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வயல்களில் பயிரிட்டுள்ள குறுவை நெல் நடவும், இளம் கரும்பு, வாழை, காய்கறி பயிர்களும் மூழ்கி போயுள்ளது. இதனால் பயிர்கள் காற்றோட்டம் இன்றி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வயல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி, விடுபடாமல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.