12 மணி நேர வேலை மசோதா:தொழிலாளர் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் - மதுரையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
12 மணிநேர வேலை மசோதா விவகாரத்தில், தொழிலாளர் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என மதுரையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
12 மணிநேர வேலை மசோதா விவகாரத்தில், தொழிலாளர் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என மதுரையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
விமான நிலையத்தில் பேட்டி
தெலுங்கானா-புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலை நேரத்தை அதிகப்படுத்தி, ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்தலாம் என்பதற்காக மருத்துவ ரீதியாக ஆய்வு நடக்கிறது. எவ்வளவு நேரம் வேலை செய்கிறோமோ, அந்த மணி நேரத்தை 8-ஆக பிரித்துக் கொள்ளலாமா? 12-ஆக பிரித்துக் கொள்ளலாமா? 12 ஆக பிரித்துக்கொண்டால் ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது. 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு அதிகப்படியான நேரம் ஓய்வெடுப்பதால், மீண்டும் பணிக்கு வரும்போது அதன் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பப்படுபவர்கள் அவரவர் தொழிலுக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளலாம். கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலாளர் விருப்பத்திற்கு விட்டுவிடலாம் என்பது என்னுடைய கருத்து.
கவர்னருக்கு எதிரான போக்கு
கவர்னருக்கு எதிரான ஒரு போக்கு எப்போதும் இருக்கிறது. கவர்னரை அரசியல் ரீதியாக பார்க்கிறார்கள். நான் தமிழகத்தை பற்றி சொல்லவில்லை. தமிழகம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியிடம்தான் கேட்க வேண்டும்.
தெலுங்கானாவில் மக்களுக்கான கவர்னராக நான் செயல்படுகிறேன். மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நிற்கிறேன். இப்போதைக்கு தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசோதா மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.
எய்ம்சில் படிக்கிறோமா, ராமநாதபுரத்தில் படிக்கிறோமா என்பதில்லை. மனிதர்களைப் படிக்கிறோமா, நோயைப் படிக்கிறோமா என்பதில் தான் உள்ளது. எய்ம்ஸ் என்பது அதிகப்படியான நவீன தொழில்நுட்பத்தோடு உலக தரம் வாய்ந்தது. எல்லா விதத்திலும் உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மருத்துவ வசதி, நம் தமிழகத்திற்கு கிடைப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று.
ஆரம்ப காலகட்டத்தில் எல்லா விஷயத்திலும் ஒரு பிரச்சினை இருக்கும். முதல் 2 வருடங்கள் எய்ம்சில்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. ஆரம்பகால படிப்பை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்த பிறகுதான் எல்லோருக்கும் தெரியவரும். எல்லா விமர்சனங்களும் தவிடு பொடி ஆகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்
பின்னர் அவர் காரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறும்போது, "தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணி நேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது. இதனை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நலம் பயக்கும் என்றால், அது நல்லது. அது தொழிலாளர் விருப்பத்திற்கு ஏற்ப அமைய வேண்டும். இந்த சட்டம் கர்நாடகம் மற்றும் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற கட்சிகள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்த வேண்டாம். இது என் தனிப்பட்ட கருத்து. அரசியல் கருத்து அல்ல. எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பேச வேண்டும்.
பா.ஜனதாவில், டெல்லியில் உள்ள தலைமையே கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் என்பது போல கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர். நான் கவர்னராக உள்ளேன். எனவே அரசியல்வாதிகளின் பேச்சு தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சில் என்னை இழுக்காதீர்கள். நான் தலைவராக இருந்தபோது கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் எனக்கு நல்ல மரியாதை இருந்தது, என்று கூறினார்.
பேட்டியின்போது மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் மகாசுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொருளாளர் ராஜ்குமார், செயலாளர் சுப்பா நாகுலு, ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.