வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6,25,334 ஆண்கள், 6,67,953 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 161 பேர் என்று 12,93,448 வாக்காளர்கள் இருந்தனர்.
அதன்பின்னர் தொடர் சுருக்கமுறை காலத்தில் 9 ஆயிரத்து 787 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். இறப்பு, இருமுறை பதிவு, மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 35 ஆயிரத்து 127 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி 6,13,707 ஆண்கள், 6,54,248 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 153 பேர் என்று 12,68,108 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 40,541 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிகபட்சமாக 2,88,564 பேர் உள்ளனர்.
சிறப்பு முகாம்கள்
வரைவு வாக்காளர் பட்டியல் 651 வாக்குச்சாவடி மையங்கள் உள்பட 666 மையங்களில் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இதனை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பம் அளிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களில் வாக்காளர்கள் சமீபத்திய எடுத்த கலர் புகைப்படங்களை ஒட்டி, ஆதார் எண்ணை அளிக்க வேண்டும். மேலும் வாக்காளர் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற இணையதளத்திலோ, voter Helpline App மூலமாகவோ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, தேர்தல்பிரிவு தாசில்தார் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்
சட்டமன்ற தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
காட்பாடி 1,18,128 1,26,594 34 2,44,756
வேலூர் 1,21,822 1,31,491 37 2,53,350
அணைக்கட்டு 1,23,713 1,31,433 31 2,55,177
கே.வி.குப்பம் (தனி) 1,10,658 1,15,595 8 2,26,261
குடியாத்தம் (தனி) 1,39,386 1,49,135 43 2,88,564
மொத்தம் 6,13,707 6,54,248 153 12,68,108