கன்டெய்னரில் கடத்திய ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பிடிபட்டது; டிரைவர் கைது


வீரவநல்லூர் அருகே, கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திய ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரை கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மினி லாரிகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்து வினியோகம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு காருக்குறிச்சி பகுதியில் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த வழியாக வந்த மினி கன்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, லாரியில் ரகசிய அறை அமைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த அறையை திறந்து சோதனையிட்டனர். அதில், ஏராளமான சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 574 கிலோ புகையிலை பொருள் பாக்கெட்டுகள் அதில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

இதனையடுத்து லாரி மற்றும் 574 கிலோ புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியின் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா படப்பாணியில் புகையிலை பொருட்களை கடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story