12 குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன
மணல்மேடு அருகே சித்தமல்லி கிராமத்தில் அட்டூழியம் செய்த 12 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
மணல்மேடு அருகே சித்தமல்லி கிராமத்தில் அட்டூழியம் செய்த 12 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
உணவு பொருட்களை எடுத்து சென்றன
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த சித்தமல்லி கிராமத்தில் மணவெளி தெரு, அக்ரஹாரம், கொல்லர் தெரு, தோப்பு தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் குரங்குகள் புகுந்து குடிசைகளின் கூரையை பிய்த்தும், ஓட்டு வீடுகளின் ஓடுகளை கலைத்து எறிந்தும் வருகின்றன.வீடுகளில் உணவு பொருட்களை தூக்கி சென்று அட்டூழியம் செய்கிறது.. உணவை எடுக்க வரும் குரங்குகள் சிறுவர், சிறுமிகளை மட்டுமன்றி பெரியவர்களையும் கடித்து காயப்படுத்தின.
12 குரங்குகள் பிடிக்கப்பட்டன
குரங்குகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் லலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் முதல் கட்டமாக சித்தமல்லி கிராமத்தில் கூண்டு வைத்து 12 குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மீதமுள்ள குரங்குகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் இரண்டு இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வருவதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.