12 மாத வாடகை செலுத்தும் அறிவிப்பை கைவிட வேண்டும்
12 மாத வாடகை செலுத்தும் அறிவிப்பை கைவிட வேண்டும் என முதல்-அமைச்சருக்கு, வணிகர் சங்கத்தினர் இ-போஸ்ட் அனுப்பினர்.
வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஞானவேலு தலைமையில் செயலாளர் ஏ.வி.எம்.குமார், இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத், நகர செயலாளர் பாபுஅசோகன், வேலூர் மாநகராட்சி கடை வணிகர்கள் சங்க தலைவர் பிச்சாண்டி, துணைச்செயலாளர் ஸ்ரீராம்பிரபு, திவ்யாசீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு நேற்று வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து இ-போஸ்ட் அனுப்பினர். அதில், வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளது. தற்போது அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால் பல வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் 2016-ம் ஆண்டு ரூ.2,400 வாடகை செலுத்திய மாநகராட்சி கடைகளுக்கு சந்தை மதிப்பின்படி ரூ.9 ஆயிரம் வாடகை என்று நிர்ணயம் செய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் வாடகை உயர்வின்படி ஜி.எஸ்.டி.யுடன் அந்த கடைகளுக்கு தற்போது ரூ.14 ஆயிரம் வாடகை கட்டி வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரிகள் அந்த கடைகளுக்கு 12 மாத வாடகை முன்பணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களினால் சில்லரை வணிகம் படிப்படியாக அழிந்து வரும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வணிகர்களை துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் 12 மாத வாடகை முன்பணம் கட்ட வேண்டும் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.