நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும் சில நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி வர உள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும் சில நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி வர உள்ளனர்.
12 மீனவர்கள் சிறைபிடிப்பு
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் விஜயா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மகன் ரவி (வயது40), ஆனந்தமணி (44), ராஜா (32), ரவி (48), மதிபாலன் (36), காத்தலிங்கம் (50), ராமமூர்த்தி (38), அன்பு (32), வேல்மயில் (48), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரகு (38), தினேஷ் (26), சித்திரவேல் (42) ஆகிய 12 மீனவர்களும் கடந்த 7-ந் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த 12-ந் தேதி அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 நாகை மீனவர்களையும், விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.
விடுதலை
பின்னர் மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்களை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நேற்று வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 12 மீனவர்களும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 பேரையும் விடுதலை செய்து இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நாகை மீனவர்களின் விசைப்படகு இலங்கை நாட்டின் உடையாக்கப்பட்டது.
சில நாட்களில் நாகைக்கு திரும்புவார்கள்
விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களையும், இந்திய தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு சில நாட்களில் நாகைக்கு திரும்ப உள்ளனர்.