சாலையில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 12 பேர் காயம்


சாலையில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 12 பேர் காயம்
x
தினத்தந்தி 4 Oct 2023 12:30 AM IST (Updated: 4 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே சாலையில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், கீழமுடிமன், சிலோன் காலனி ஆகிய பகுதியில் இருந்து பெண்களை ஏற்றிக்கொண்டு வேலைக்காக தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒரு வேன் புறப்பட்டது. வேனை ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) ஓட்டி சென்றார்.

புதியம்புத்தூர் அருகே சென்று கொண்டிருந்தத போது சாலையின் குறுக்கே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் மீது வேன் மோதாமல் இருப்பதற்கு மணிகண்டன் திடீரென பிரேக் போட்டார்.

12 பேர் காயம்

இதில் வேன் நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மணிகண்டன், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த தங்கமுனியம்மாள், லிங்கம்மாள், ஸ்ரீதேவி, சிலோன் காலனியைச் சேர்ந்த ராமலட்சுமி, கஜேந்திரன், தனலட்சுமி, கீழமுடிமனைச் சேர்ந்த சந்தனசெல்வி, சரஸ்வதி, நாகேஸ்வரி, சுந்தரி, ஆறுமுகத்தாய் ஆகிய 12 பேர் காயம் அடைந்தனர்.

இதை அடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்துக்குள்ளான வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மற்றொரு வேனில் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story