நாசவேலையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க 12 போலீஸ் தனிப்படைகள்
திருச்சியில் ரெயில் தண்டவாளத்தில் டயர் வைத்த சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்தில் நாசவேலையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க 12 போலீஸ் தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரமும் ரோந்து நடக்கிறது.
தண்டவாளத்தில் டயர்கள்
திருச்சி அருகே வாளாடி அருகே கடந்த 2-ந்தேதி ரெயில் தண்டவாளத்தில் 2 டயர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அப்போது அந்த வழியாக சென்ற கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் ரெயில் டயர்களில் மோதியது. அதில் என்ஜினில் இருந்த மின்இணைப்பு பெட்டி சேதமாகி 4 பெட்டிகளில் மின்இணைப்பு தடைபட்டது.
அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்தில் இருந்து ரெயில் தப்பியது. கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சதிச்செயலில் ஈடுபட்ட 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
12 தனிப்படைகள்
இதைத் தொடர்ந்து நாசவேலைகளை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் ரெயில்வே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில்வே போலீசார் தண்டவாள கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில்வே போலீசாரை கொண்ட 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் கொடைரோடு முதல் திண்டுக்கல் வரை, கொடைரோடு முதல் வாடிப்பட்டி வரை, திண்டுக்கல் முதல் பழனி வரை, பழனி முதல் பொள்ளாச்சி வரை, திண்டுக்கல் முதல் வெள்ளியணை வரை, திண்டுக்கல் முதல் அய்யலூர் வரை 6 பகுதிகளாக ரெயில் தண்டவாள பகுதி பிரிக்கப்பட்டது.
24 மணிநேரமும் ரோந்து
ஒவ்வொரு பகுதிக்கும் 2 தனிப்படைகள் வீதம் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து பணி நடக்கிறது. இந்த தனிப்படை போலீசார் தண்டவாளங்கள் அமைந்துள்ள பகுதி வழியாக ரோந்து செல்வதோடு, சந்தேகப்படும் நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர். அதோடு ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் கிராமங்களிலும் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.