காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
ஜோலார்பேட்டையில் காவலர் குடியிருப்பில் புகுந்து பட்டப்பகலில் பெண் போலீசில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
பெண் போலீஸ்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் நந்தினி (வயது 32). இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது மகனை தூங்க வைத்துவிட்டு, 11 மணி அளவில் பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் மதிய உணவிற்காக வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு திறந்திருந்தது. வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை அழைத்து வீட்டை பூட்டிவிட்டு சென்று விளையாட வேண்டியது தானே என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது மகன் வீட்டை பூட்டி விட்டுதான் சென்றேன் என்று கூறியுள்ளான்.
12 பவுன் நகை திருட்டு
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் சென்று பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு, பூட்டு காணாமல் போயிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் கபோர்டில் வைத்திருந்த 12 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நந்தினி, இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசிக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து நகை திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டார்.
பட்டப்பகலில் காவலர் குடியிருப்பில் புகுந்து, பெண் போலீசின் 12 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.