பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறிப்பு


பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறிப்பு
x

பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

சூரமங்கலம்:

தனியார் பள்ளி ஆசிரியை

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அம்பலம் திருத்தி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி சொர்ணம்பாள் (வயது 53). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சக ஆசிரியைகளுடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றார்.

பின்னர் அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு நேற்று முன்தினம் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த ரெயில் காலதாமதமாக நள்ளிரவு 1.20 மணி அளவில் சேலத்துக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது சொர்ணம்பாள் உள்பட அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

12 பவுன் சங்கிலி பறிப்பு

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் நெருங்கிய நிலையில், ரெட்டிப்பட்டி பகுதியில் ரெயில் மெதுவாக சென்றது. அந்த நேரம் மர்ம நபர் ஒருவர் சொர்ணம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு, தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சொர்ணம்பாள் சத்தம்போட்டார்.

சக பயணிகள் எழுந்து வருவதற்குள், மர்ம நபர் ரெயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி அதில் இருந்து இறங்கி தப்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து ரெயில் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். அவர்கள் சொர்ணம்பாளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறிது காலதாமதத்துக்கு பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story