மூதாட்டியை கொலை செய்து 12 பவுன் நகை கொள்ளை
ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் மூதாட்டியை கொலை செய்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் மூதாட்டியை கொலை செய்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூதாட்டி கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் அனுமன்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாவு மனைவி காந்தா (வயது 65). இவரது மகன் சரவணகுமார் (46), இவருடைய மனைவி சுபா ஆகியோர் பக்கத்து கிராமமான காமராஜர் நகர் பகுதியில் உள்ள நிலத்தை பார்த்துக் கொள்ள சென்று விட்டனர். இதனால் காந்தா தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மர்ம நபர்கள் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் காந்தாவின் வீட்டுக்குள் புகுந்து, காந்தா கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். அப்போது மூதாட்டி கூச்சல் போடவே மர்ம ஆசாமிகள் மூதாட்டி தலை மீது தாக்கி கீழே தள்ளி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து கொலை செய்துள்ளனர்.
நகை கொள்ளை
பின்னர் காந்தா கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்து இருந்த 5 பவுன் வளையல் என மொத்தம் 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்ததும் சம்பவம் இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் திருப்பத்தூர் கணேஷ், வாணியம்பாடி சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து மூதாட்டி காந்தாவின் மகன் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.