பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 12 கடைகளுக்கு அபராதம்
பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையாளர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் அசன்முகமது தலைமையிலான அதிகாரிகள் நேற்று பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள ஓட்டல், உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது 12 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இனிமேல் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது, விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.