சென்னையில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 12 சிறப்பு புலனாய்வு குழுக்கள்


சென்னையில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 12 சிறப்பு புலனாய்வு குழுக்கள்
x

சென்னையில் முக்கிய வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள 12 சிறப்பு புலனாய்வு குழுக்கள் இன்று முதல் பணியை தொடங்குகிறது.

சென்னை

சென்னை,

சென்னையில் 103 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஒருவரும், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவரும் பணி செய்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று போலீஸ் நிலையங்களுக்கு ஒரு உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டு, பணியாற்றுகிறார். கொலை போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் கையாளுகிறார்கள். கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்கள் சம்பந்தப்பட்டவைகளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மிகவும் முக்கியமான, கமிஷனர் விரும்பும் வழக்குகளை விசாரிக்க புதிதாக 12 சிறப்பு புலன் விசாரணைக்குழு பிரிவுகள் சென்னை காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு புலன் விசாரணைக்குழுக்கள் அந்தந்த துணை கமிஷனர்களின் கீழ் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

12 சிறப்பு புலனாய்வு குழுக்களின் செயல்பாட்டையும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சமீபத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இந்த சிறப்பு புலனாய்வு போலீஸ் பிரிவுகள் செயல்பட தொடங்குகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் தற்காலிகமாக குறிப்பிட்ட சில குற்றப்பிரிவு போலீசாரை பணி அமர்த்தி உள்ளனர்.

அதன்படி அடையாறு துணை கமிஷனரின் சிறப்பு புலனாய்வு குழுவில் தரமணி குற்றப்பிரிவு போலீசார் பணியாற்றுவார்கள். பரங்கிமலை சிறப்பு புலனாய்வு குழுவில் நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசாரும், தியாகராயநகர் துணை கமிஷனர் குழுவில் மாம்பலம் குற்றப்பிரிவு போலீசாரும், மயிலாப்பூர் துணை கமிஷனர் குழுவில், அபிராமபுரம் குற்றப்பிரிவு போலீசாரும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் குழுவில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசாரும், பணியாற்றுவார்கள். அண்ணாநகர் துணை கமிஷனர் குழுவில் சூளைமேடு குற்றப்பிரிவு போலீசார் பணி செய்வார்கள். கொளத்தூர் துணை கமிஷனர் குழுவில் பெரவள்ளூர் குற்றப்பிரிவு போலீசாரும், கோயம்பேடு துணை கமிஷனர் குழுவில் வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசாரும் பணிசெய்வார்கள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் குழுவில், கீழ்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் பணியாற்றுவார்கள்.

பூக்கடை துணை கமிஷனர் குழுவில் ஏழுகிணறு குற்றப்பிரிவு போலீசார் இடம் பெற்றுள்ளனர். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் குழுவுக்கு ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் குழுவில் பேசின்பிரிட்ஜ் குற்றப்பிரிவு போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் பணியாற்றும் போலீசாருக்கு முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணி போன்ற இதர பணிகள் எதுவும் கிடையாது. இவர்கள் சாதாரண சீருடையில் இருப்பார்கள். இவர்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசாரை போன்று செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் ஆணையிடும் முக்கிய வழக்குகளை விசாரிப்பார்கள்.


Next Story