நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; 12 பேர் பணி நீக்கம்


நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; 12 பேர் பணி நீக்கம்
x

திருவிடைமருதூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு செய்ததாக 12 பேரை பணியில் இருந்து நீக்கி நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

திருவிடைமருதூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு செய்ததாக 12 பேரை பணியில் இருந்து நீக்கி நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

குறுவை நெல் கொள்முதல்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை), விளங்கி வருகிறது. இந்த மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தற்போது டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை அறுவடை தொடங்கி நடந்து வருகிறது.இதையடுத்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து 40 கிலோ மூட்டைக்கு கூடுதலாக 2 கிலோ எடை வைத்து 42 கிலோ என கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலாண் இயக்குனர் ஆய்வு

இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை நேற்று தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சன்னாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில் உத்தேசமாக 20 மூட்டைகளை எடுத்து மீண்டும் எடை போடப்பட்டது. அப்போது அந்த மூட்டைகளில் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவை விட வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது.மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.57 ஆயிரம் அளவுக்கு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக பருவகால உதவுபவர் இளையராஜா, பணியினை கண்காணிக்க தவறிய கொள்முதல் அலுவலர் கோவிந்தசாமி மற்றும் கொள்முதல் நிலைய மேஸ்திரி உள்பட 11 கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அங்கு பணியாற்றிய 12 பேர் ஒட்டுமொத்தமாக உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

கடும் நடவடிக்கை

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தவொரு முறைகேட்டில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலாண் இயக்குனர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தஞ்சை மண்டல முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கும்பகோணம் அலகு துணை மேலாளர் இளங்கோ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைமை பொறியாளர் ராஜாமோகன், தஞ்சை கோட்ட செயற் பொறியாளர் குணசீலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story